Loading

‘தமிழ் ஓசை’ என்பது...

சங்க இலக்கியப் பாடல்களைப் பாடுகிற ஒரு சேர்ந்திசைக்குழு.

என்ன நோக்கம்…?

சங்க இலக்கியப் பாடல்கள் புதையல் போன்று நம்மிடம் ஏராளமாய் கிடக்கின்றன. இதை தமிழறிஞர்களும், மொழியியலாளர்களும் மட்டுந்தான் சுவைத்து மகிழ முடியுமா, சாமானியர்களும் கேட்டு விளங்கிச் சுவைக்கும் வண்ணம் ஒரு வாய்ப்பை உருவாக்கினால் என்ன என்று சிந்தித்ததன் விளைவே ‘தமிழ் ஓசை’.

எத்தனை பேர் கொண்டது…?

உள்ளூர் நிகழ்வுகளில் முழு குழுவாக 30 பேர் பாடுகிறோம். வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லும்போது அந்தந்த இடத்தின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் செலவுத் திட்டம் மற்றும் பிற வசதிகளைப் பொறுத்து 10 - 20 பேர் வரை செல்கிறோம்.

என்ன பாடுவார்கள்…?

திருக்குறளில் தொடங்கி, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை வழியே, பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் வரை பாடுகிறோம். இதில் நாட்டுப்புறப் பாடல்களான தாலாட்டு, ஒப்பாரி, மீனவர் பாடல் மற்றும் கானாப் பாடல் போன்றவைகளும் உண்டு.

எந்தப் பாணி இசை…?

இதில் கர்நாடக சங்கீதம், மெல்லிசை, நாட்டுப்புற இசை, கானா, மேற்கத்திய இசை என ஜனரஞ்சகமான அனைத்து பாணிகளிலும் பாடல்கள் உண்டு. இப்பாடல்களுக்கு பலதரப்பட்ட பாரம்பரிய, மேற்கத்திய இசைக்கருவிகள் மற்றும் தாளவாத்தியங்கள் பலமான பின்னணி இசை சேர்க்கும்.

எல்லாரும் ரசிக்க இயலுமா…?

பழந்தமிழ் இலக்கியங்கள் கடுமையான மொழியில் இருக்குமே, இதை எப்படி எல்லோரும் விளங்கிக்கொள்வார்கள்? திரைப்படப் பாடல்களில் மூழ்கியிருக்கிற இத்தலைமுறை சங்க இலக்கியங்களைக் கேட்டு மகிழுமா? இது பலர் மனதிலும் எழக்கூடியக் கேள்வி.

ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் அந்நூலையும், நூலாசிரியரைப் பற்றிய குறிப்புகளையும், அப்பாடலின் பொருளுரையையும், அதில் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சத்தையும் சுருக்கமாக சொல்லிவிட்டுப் பாடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. அமர்க்களமான பின்னணி இசையோடு அப்பாடலைக் கேட்பது புது அனுபவத்தை தருகிறது. இவ்வளவு நாள் இருந்த அந்த இடைவெளி குறையத் தொடங்குகிறது.

எவ்வளவு நேரம்…?

தொகுப்பு வர்ணனை, பாடல்கள் என எல்லாமாய் சேர்ந்து இந்நிகழ்ச்சி சுமாராக ஒன்றரைமணி நேரம் (90 நிமிடங்கள்) வரை சற்றும் தொய்வில்லாமல் செல்லும். எங்களின் நிகழ்ச்சிகளில், பார்வையாளர்கள் “Once more” என சில பாடல்களை மீண்டும் பாடச்சொல்லிக் கூவுவது எங்கள் நிகழ்ச்சியின் தன்மைக்கு நிரூபணம்.